நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான்
மற்றவர்களைப் பார்த்து சிரிப்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். யாராவது ஒரு சிறிய பிழை செய்தால், அது நம்மை சிரிக்க வைக்கிறது. சில சமயம் நாம் அவர்களை கேலி செய்கிறோம். நம்மில் சிலர் மற்றவர்களின் பிழைகளிலும் தவறுகளிலும் மகிழ்ச்சி கூட அடைகிறோம். இதைப் பற்றி வம்பு பேசி பரப்பி எல்லோருக்கும் தெரிவிக்கிறோம்.
ஆனால் நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது பற்றி என்ன? நாம் ஒரு முட்டாள்தனமான செயல் செய்வது பற்றி என்ன? அதுவும் நாம் இந்த உலகிலேயே அதிக கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொள்ளும் போது? இது நமக்கு சரிப்படுவது இல்லை! நமது செயலையோ அல்லது சொல்லையோ பார்த்து சிரிப்பவர்களை நாம் கோபிக்கிறோம். அவர்களின் முகத்தில் தோன்றும் புன்சிரிப்பையும் சிரிப்பையும் கண்டு வேதனைப் படுகிறோம். நமது சிறிய பிழையைப் பற்றி யாருக்கும் தெரியாவிட்டால் கூட நாம் நம்மைப் பற்றியே கடினமான சுய விமரிசனம் செய்துக் கொள்கிறோம். நம்மை நாமே மட்டமாக நினைத்துக் கொள்கிறோம்.
இதன் காரணம்.. நமது மமதை தான். நாம் நமக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் அளித்துக் கொள்கிறோம். நாம் ஒரு தவறும் செய்ய முடியாது என்று கர்வம் கொள்கிறோம். மற்றவர்கள் தான் தவறு செய்வார்கள், நாம் மிக பூரணமானவர் என்று நம்புகிறோம்.
இதனால் நமக்கு என்ன நன்மை? ஒன்றுமே இல்லை. மற்றவர்கள் நாம் சிறந்தவர் என்று நினைக்காவிட்டால் தான் என்ன? நாம் தான் நமது உலகின் நடுவிடம். இது நமது வாழ்க்கை. மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாத வரையில், மற்றவர்களுக்கு தீமை செய்யாத வரையில், நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நம்முடைய விருப்பம். இந்த முறையில் நமது நோக்கத்தை சிறிதளவே மாற்றிக் கொண்டால், என்ன மாறுதல் அமைகிறது என்று பாருங்கள். எல்லா சொற்களிலும் மனப்பான்மை, நோக்கம் என்ற சொற்கள் மிக முக்கியமானவை என்று எனக்கு தோன்றுகிறது. ஒருவரின் உலக நோக்கம் நல்லதாகவும் உற்சாகமானதாகவும் இருந்தால், உலகமே நல்லதாகவும் இன்பமானதாகவும் தோன்றுகிறது. ஒருவரின் உலக நோக்கம் கடுமையாகவும் மழுங்கலாகவும் இருந்தால், உலகமே தீயதாகவும் துன்பமானதாகவும் தோன்றுகிறது.
நாம் நமது நோக்கத்தை மாற்றிக் கொண்டால், நாம் நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் குறுகிய விசாரணை மனப்பான்மையுடன் காணாமல் இருந்தால், நமது மனம் இலேசாகிறது. நமது மனம் தெளிவடைகிறது, அமைதி பெறுகிறது, மகிழ்வடைகிறது. எனவே, நாம் ஒரு பிழை செய்யும் போது என்ன செய்ய வேண்டும்? நாமே நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்ள கற்க வேண்டும். தவறு செய்தால் தவறொன்றுமில்லை! சில சமயம் நாம் முட்டாள்தனமாக ஏதாவது செய்தால், அதுவும் சரி தான். இது தான் நம்மை மனிதர்களாக்குகிறது. எல்லோரும் சில சமயம் தவறு செய்வார்கள். நாம் ஏன் செய்யக் கூடாது? மற்றவர்களை நாம் மன்னிக்கிறோம். நம்மையே நாம் ஏன் மன்னிக்கக் கூடாது? இந்த மனப்பான்மை கொண்டால், இந்த உலகத்தில் நாம் தான் மிக முக்கியமானவராகவும் மிக சிறந்த ஒழுக்க வீறாப்பு உள்ளவராகவும் இருக்க வேண்டும் என்ற கனமான சுமை நீங்கி விடுகிறது.
தவறு செய்தால் தான் என்ன? எல்லோரும் நம்மால் முடிந்த வரை எதையும் சரியாக செய்ய தான் முயற்சி செய்கிறோம், செய்யவும் வேண்டும், இது உண்மை தான். அதனால் தவறு செய்யவே அஞ்சுவது அவசியமில்லை.
இன்னும் கூட ஒன்று சொல்லலாம், சில சமயம் தவறுகள் செய்வது நமக்கு நல்லது தான். இந்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம். நமது மனநிலை முன்னேறுகிறது. நமது மன வலிமை அதிகரிக்கிறது. தினந்தோறும் உலக நடவடிக்கைகளில் ஈடுபட தைரியம் தருகிறது. எதிர்காலத்தில் வரக் கூடிய பெரும் இன்னல்களை எதிர்க்க நம்மைத் தயாரிக்கிறது.
சமூகத்தில் நம்மை மற்றவர்கள் விரும்புகின்றனர். நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்ளும் போது, மற்றவர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பதற்கு பதிலாக, நம்முடன் சிரிக்கின்றனர். நிலமையில் களிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகிறது. நாம் மமதை கொண்டவராகவும் அகங்காரம் உள்ளவராகவும் இல்லாத்தால், மற்றவைகள் நம்மை அதிகமாக விரும்புகின்றனர். நட்பும் முன்னேறுகிறது.
ஒன்று நான் உறுதியாக சொல்ல விரும்புகிறேன்; ஒரு பிழை செய்வதால் நாம் மூடரில்லை, முட்டாளில்லை. இந்த பிழைக்கு முன்னால் எவ்வளவு அறிவுள்ளவராகவும், புத்திசாலியாகவும் இருந்தோமோ, அதே அளவு தான் பிழைக்குப் பிறகும் இருப்போம். இன்னும் சொல்லப்போனால், முன்பை விட அதிக புத்திசாலியாகவும் இருக்கக் கூடும். இங்கும் அங்கும் சில பிழைகள் செய்வதனால் நமது தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும், அறிவையும், விவேகத்தையும் இழக்கக் கூடாது. தவறுகள் செய்வது உலக வாழ்க்கையின் நடைமுறை என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நாம் சில சமயங்களில் வெற்றி அடைவோம், சில சமயங்களில் தோல்வி அடைவோம். இந்த விதத்தில் உலகம் எப்போதுமே எதிர்பதங்களால் நிறைந்தது தான். நன்மை இருந்தால் தீமையும் இருக்கும்; வெற்றி இருந்தால் தோல்வியும் இருக்கும்.
உலகில் நமது சிறந்த நடைமுறை என்னவெனில், நமது செயல்களை சிறந்த முறையில் செய்ய வேண்டும்; பின்பு வெற்றியோ தோல்வியோ, நமது மனதில் சமநிலை வைத்துக் கொள்ள வேண்டும். நாம் எப்போதும் வெற்றி காண முடியாது. செயல்களின் விளைவுகள் எப்போதும் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஆனால் மனதில் சரிசம நிலை கொள்வது நமது கட்டுப்பாட்டில் உள்ளது. இரண்டும் நமக்கு நல்லது தான். இன்பம் நமக்கு வெளியில் பொருட்களிலும், நிகழ்ச்சிகளிலும் இல்லை; நமது அமைதியான மனநிலையிலும், நேர் நோக்கத்திலும் தான் உள்ளது. மனதில் எழும் எண்ணங்களும் வாழ்க்கையில் செய்யும் நடைமுறை பழக்க வழக்கங்களும் மாறுவது எளிதில்லை. சிறிது சிறிதாகத் தான் முன்னேறும். அதனால் இதை மிகவும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். ஒரு பேரறிஞர் சொன்னது போல், “அவரவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடிவு செய்கிறார்களோ, அவ்வளவு சந்தோஷமாகத் தான் இருப்பார்கள்”.
எனவே, நம்மைப் பார்த்து நாமே கொஞ்சம் சிரிப்போம்! நமது செலவிலேயே சிறிது மகிழ்ச்சி பெறுவோம்! இதனாம் நாம் ஒன்றும் குறைந்து போக மாட்டோம்! இதற்கு தான் உறுதி தருகிறேன்.