அநீதி ? கடவுளின் பிழை ?

Vasundhara வாழ்க்கை Leave a Comment

நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான்

அநீதி ? கடவுளின் பிழை ?

சில சமயம் இந்த உலகில் அநீதி நேரிடுகிறது. காரணமின்றி சிலர் நம்மை சீர் கெட்ட முறையில் நடத்துகின்றனர். அல்லது அறிவுக்கு ஏற்காத சம்பவம் நிகழ்கிறது. அல்லது கொடூகரமான நிகழ்ச்சி நடக்கிறது. நாம் நம்மைக் கேட்கிறோம், “ஏன்? எனக்கு ஏன் இது நிகழ வேண்டும்? நான் ஒன்றும் தவறு செய்யவில்லையே. இந்த முறை பிழை எனதில்லையே.”

பதில்களைத் தேடுகிறோம். சில சமயம், பதில் ஒன்றும் கிடைப்பதில்லை. நிகழ்ச்சி நிகழ்கிறது, அதோடு சரி. முதலில் நாம் கடவுளைக் குற்றம் சாட்டுகிறோம். “கடவுளே இல்லை”, என்கிறோம். “இத்தகைய எங்கும் நிறைந்த, வலிய, நல்ல, நேரிய கடவுள் இருந்தால், இந்த அநீதியான சம்பவம் எனக்கு ஏன் நிகழ் வேண்டும்?”, என்று கேட்கிறோம். விநோதம் என்னவெனில், நமக்கு தீமை வந்தால் தான் கடவுள் மீது பழி போடுகிறோம். நல்லது நடந்தாலோ அதன் காரணத்தையும், மதிப்பையும், பாராட்டுகளையும் நமக்கே கொடுத்துக் கொள்கிறோம்!

முதலாவதாக, கடவுளைப் பற்றி சிறிது புரிந்துக் கொள்வோம். நமக்கு கடவுளையோ அல்லது கடவுளின் நோக்கங்களையோ நேர்முகமாக தெரியாது. நிகழ்ச்சி நடைபெற்றது, அவ்வளவு தான் நமக்கு தெரியும். ஆனால், நமக்கு ஒரு விஷயம் புரியாதாதால், அதை அடியோடு விட்டு விட வேண்டும் என்று அவசியமில்லை. உதாரணமாக, கணிதம் சில மாணவர்களுக்கு புரியாததால், அல்லது கடினமாக இருப்பதால், அவர்கள் அந்த படிப்புப் பிரிவையே, பாடத்தையே, அல்லது பள்ளிக்கு செல்வதையே நிறுத்தி விடுவதில்லை. அதே போல், கடவுளைப் பற்றி நமக்கு புரியாததால், இறை வழிபாட்டையும், கடவுளைப் பற்றி கற்பதையும் நமது வாழ்விலிருந்து அகற்ற வேண்டியது அவசியமில்லை. யார் அறிவார், ஒருவேளை பின்னர் இதனால் நமக்கு மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்கக் கூடும், இல்லையா?

இரண்டாவதாக கடவுளைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், அது எல்லோருக்கும் சமமான ஒரு வலிய சக்தியென தோன்றுகிறது. சிலர் அதை இயற்கை என்கின்றனர். சிலர் அதை இறை பொருள் என்றும் உயர்ந்த உன்னத சக்தி என்றும் அழைக்கின்றனர். இந்த சக்தி ஒரு சிறந்த நண்பரைப் போன்றதாகும். உண்மை நண்பர்கள் நமது விவகாரங்களில் தலையிடுவதில்லை. நம்மை நம் இயல்பில் இருக்க விடுகின்றனர். ஆனால், நமக்கு தேவைப் படும் போது, அவர்கள் அருகில் இருக்கின்றனர். பணிவுடன் அவர்களின் உதவியை நாம் நாடும்போது, நமது தேவைப்படி உதவுகின்றனர். கடவுளும் அதே போல் தான். நாமே நமது நடவடிக்கைகளை கவனித்துக் கொள்ள முடியும் என்று நாம் இறுமாப்புடன் நினைக்கும் வரை, கடவுளும் நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. அதற்கு மாறாக, அணுகி, பணிவுடன் உதவி கேட்டால், விரைந்து வந்து உதவுகிறது. எனவே, கடவுளை நாம் அலட்சியமாக எண்ணக்கூடாது. நமக்குக் கிடைத்த ஒரு சிறந்த பரிசு, அன்பளிப்பு, உபரிச் சலுகை என்று பாராட்ட வேண்டும். அதனால் கடவுள் மீது பழி போடாமல், அதற்கு பதிலாக, கடவுளால் நமக்கு ஏதாவது பலன் உண்டா என்று பார்ப்பதே சிறந்த செயலாகும்.

கடவுளைப் பற்றி இன்னொரு விஷயம்,  அது மனித இனத்தை விட மிக சக்தி வாய்ந்ததாகும். மேலும் அது நமது உலக வாழ்க்கையயும், மனித இனத்தின் நீதிகளையும் கடந்த இறை பொருள் ஆனதால், நமக்கு உதவ மனிதரை விட அதிக வல்லமை கொண்டதாகும். எனவே, நமக்கு இடர் வரும்போது கடவுளைக் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, வழிபட்டு, உதவி கேட்பதே அறிவார்ந்த செயலாகும்.

வாழ்வில் சில சிறிய அநீதியான செயல்கள் நடக்கும்போது, நாம் குறை சொல்கிறோம். மற்ற சிலர் வாழ்வில் எத்தனையோ மிக பெரும் கஷ்டங்கள் ஏற்படுகின்றன. கொடிய வியாதிகள் – குறிப்பாகக் குழந்தைகளுக்கு, கொடூரமான விபத்துக்கள், போரில் தன்னலமின்றி உயிரையும், கரசரணாதிகளையும் இழப்பவர்களின் அபாக்கியம், சொத்து, செல்வம் எல்லாவற்றையும் இழக்கும் துரதிர்ஷ்டம், இப்படி பல பேருக்கு பெரும் துயரம் அமைகிறது. இவர்களின் அநீதியைப் பற்றி என்ன சொல்வது? ஆனால், ஒன்று நாம் செய்ய முடியும் –  இத்தகைய சூழ்நிலைகளை எப்படி பொறுத்துக் கொள்வது என்று நாம் கற்க முடியும். இதற்கு ஒரு வழி – ஆதிநூல்களிலிருந்தும், இத்தகைய சந்தர்ப்பங்களில் மிகவும் அமைதியுடனும், பொறுமையுடனும் இருந்த பெரும் மகான்கள், சான்றோர்கள் – இவர்களின் வழித்துணை, அறிவுரைகள் முதலிய விவேகத்திலிருந்தும் நாம் கற்று, பின்பற்றுவது தான்.

ஒரு அதிசயம் என்னவென்றால், இது போன்ற கொடிய சம்பவங்களில், துன்பங்களை எப்படியோ பொறுத்து, மனமும் உடலும் ஆற எல்லோருக்கும் ஒரு வல்லமை வருதிறது. உடல்நிலை குணமாகவும், மனநிலை நலம் பெறவும் அதற்கு வேண்டிய பலத்தை ஏதோ ஒரு சக்தி அளிக்கிறது. வியக்கத் தக்க வகையில், மிக இரக்கமுள்ளவர் நமக்கு உதவ தோன்றுகின்றனர். நோய் இருந்தால், மருத்துவர்களும் அவர்களின் உதவியாளர்களும் மிகவும் அன்புடன் நம்மை கவனித்துக் கொள்கின்றனர். சில சமயம், குடும்பத்தினரும், நண்பரும், அந்நியரும் கூட உதவி செய்ய விரைகின்றனர். இதை நாம் கடவுளின் அருள் என்று சொல்லலாம்.

துன்பம் வரும்போது நாம் மனமுடைந்து, நிலை கொள்ளாமல், அமைதியின்றி தவிக்கிறோம். இந்த சமயங்களில், நாம் கடவுளையும், சான்றோர்களையும் அணுகி, அந்த அமைதியான அறிவுரைகளை ஏற்று, யோசித்து கிரகித்துக் கொண்டால், நமக்கும் அந்த அமைதி கிடைக்க கூடும்.

எனவே எதற்கும் கடவுளைக் குற்றம் சாட்ட வேண்டாம். பதிலாக, புத்திசாலித்தனமாக, நல்லறிவுடன், உலக வாழ்க்கையின் அநீதிகளையும் இன்னல்களையும் கடக்க கடவுளின் வல்லமையை உபயோகப்படுத்திக் கொள்வோம்.

நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான்
Vasundharaஅநீதி ? கடவுளின் பிழை ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *