கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

Vasundhara வாழ்க்கை Leave a Comment

நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான்
எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது...

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால், “அவர் இந்த குற்றம் செய்திருக்க முடியாதே, அவர் கடவுளை அஞ்சுபவராயிற்றே” என்று மற்றவர்கள் சொல்வார்கள்.

அதே மூச்சில் அவர்கள், “கடவுள் அன்பின் வடிவம். கருணையே உருவானவர்” என்றும் சொல்வார்கள். கடவுள் அன்பின் வடிவாகவும், கருணையே உருவானவராகவும் இருந்தால், நாம் கடவுளிடம் ஏன் பயப்பட வேண்டும்? நமக்கு ஏற்கனவே தொல்லைகளும் கவலைகளும் இருக்கும்போது, இத்தகைய பயங்கரமான தெய்வத்தால் நமக்கு என்ன பயன்? இதற்கு ஒரு அறிவார்ந்த, பகுத்தறிவுள்ள விளக்கம் இருக்க வேண்டும், இல்லையா?

வினோதமாக, உலக அறிவாற்றலுக்கும் ஆன்மீக மெய்யறிவுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. ஒருவர் சிறந்த கண்டுபிடிப்பாளரோ, அல்லது அறிவியல் அறிஞரோ, மதிநுட்பமான அரசியல்வாதியோ, சிறந்த வணிகரோ, தேர்ந்த மருத்துவரோ, பொறியாளரோ, கலைஞரோ, அல்லது ஒரு மேதாவி பண்டிதரோ – இன்னும் யாராக இருந்தாலும், அவர் ஆன்மீகத்தில் வல்லுனராக இருப்பார் என்று பொருளில்லை. உண்மையில், இது முற்றிலும் எதிர் விதமாக கூட இருக்கக் கூடும். இந்த உலக அலுவல்களுக்காக அதிக விஷயங்களை திரட்டி அறிவில் தேக்கி வைக்க வேண்டும். ஆனால் ஆன்மீகத்திற்கு சேர்த்து வைத்த பொருட்கூளத்தை எல்லாம் நீக்கி, மனதைக் காலியாக்க வேண்டும். ஆன்மீகக் கொள்கையுள்ளவர் கடவுளை பின்பற்ற, சாதாரணமாகவும், பணிவாகவும், நேர்மையாகவும், உண்மையானவராகவும் இருப்பது அவசியம். எளிய, படிப்பறிவில்லாத பக்தர்கள் தெய்வத்தை நாடி தன் சுய தன்மையை தெளிவாக உணர்ந்து விமோசனமடைந்த கதைகள் எத்தனை தான் இருக்கின்றன!

நாம் வருத்தமாக இருக்கும் போதோ, அல்லது திடீரென்று கெட்டச் செய்தி வரும்போதோ, அல்லது கொடிய நோய் நம்மை வாட்டும் போதோ, நாம் அன்பாகவும் புரிந்துக் கொள்பவராகவும் இருப்பவரைத் தான் நாடுகிறோம். துன்பம் வந்தவுடன், நமது அன்னையோ, தந்தையோ, உடன்பிறந்தோரோ, உண்மை நண்பரோ – இவர்களிடம் தான் ஓடுகிறோம். நோய் வந்தால், நம்மை அன்புடன் நடத்தும் மருத்துவரைத் தான் தேடுகிறோம். நம்மை பயமுறுத்தி, கொடுமையாக நடத்துபவரிடம் செல்வதில்லை.

அதே போல், நாம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்யும்போது, மற்ற மானிடரிடமிருந்து உதவி பெற முடியாமல் போகும்போது, அன்பே உருவான, கருணை கொண்டு உதவும் எல்லாம் வல்ல இறை பொருளைத் தேடி அடைவது தான் கருத்துள்ளதாகத் தோன்றுகிறது. நாம் உலகில் நம்பிக்கை இழக்கும்போது, எல்லாவற்றையும் விட்டு விட்டு கடவுளை நாடுகிறோம். இதன் பொருள் என்னவென்றால், அந்த “கடவுள்” கருணையும் அன்பும் உருவானவராக, நமது துயரங்களை நீக்கி நம்மை தமது அன்பினால் சீர்திருத்துபவராக இருக்க வேண்டும் என்பது தான். துரதிர்ஷ்டமானவர்களை கொடிய நரகத்தில் தள்ளிவிட்டு, தன்னிடம் பயப்படுப்பவர்களை வானுலகிற்கு அனுப்பும் கொடுங்கோலனாகக் கடவுள் இருக்க முடியாது.

பின், தெய்வம் என்றால் மனிதர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்? ஓரளவுக்குக் காரணம் அறியாமை, இன்னும் ஓரளவுக்குக் காரணம் தாங்கள் செய்யும் தீமைகளும், அவற்றின் விளைவுகளைப் பற்றிய பயமும் தான்.

முதலில், அறியாமைக்குக் காரணம் சுயமாக யோசித்துப் பார்க்காதது தான். மக்கள் சாதாரணமாக எளிதில் புரிந்துக் கொள்ள முடியாத விஷயங்களில், தங்கள் பெற்றோர், பெரியோர், அல்லது மதசார்ந்த தலைவர்கள் சொல்வதை எல்லாம் நம்புகின்றனர். பணத்திற்காக மத பிரசாரம் செய்பவர்கள், வழக்கமாக, “நாம் எல்லோரும் பாவிகள், அதனால் நாம் கடவுளிடம் பயப்பட வேண்டும், இறை வழிபாடு நேரும் இடங்களுக்குச் சென்று, நம்மால் முடிந்தவரை பணத்தைக் கொடுக்க வேண்டும்” என்று சொல்வார்கள். “அவர்கள் சொல்வது போல் நாம் நடந்துக் கொண்டால், பிறகு கடவுள் நமக்கு தண்டனை கொடுக்க மாட்டார், நம்மை சொர்க்கத்துக்கு அனுப்புவார். அதற்குப் பிறகு நாம் முன் போலவே தீய செயல்களில் ஈடுபடலாம். ஆனால் அவர்களது சொற்களை (பயமுறுத்தல்களை!) பின்பற்றாவிட்டால் நாம் நரகத்துக்குப் போவாம்” என்ற அபிப்ராயத்தை நமக்கு அளிப்பார்கள்.

சிறு வயதிலிருந்து இத்தகைய எண்ணங்களால் சூழ்ந்திருப்பதால், தானாகவே சிந்தித்து கடவுளைப் பற்றி அறிவுள்ள முடிவுக்கு வருவது மிகவும் கடினமாகி விடுகிறது. மதவெறி மிகப் பெரிய பாவம். திறந்த மனம் கொள்வதற்கும், உள்ளத்தில் வெளிச்சமும் தென்றலும் வர இயலுவதற்கு எத்தனம் தேவை. ஆனால் மனதில் ஏற்கனவே முற்றிலும் நிரம்பியுள்ள பொருட்கூளத்தால், பெரும்பாலானவர்கள் உள்ளத்தை சுத்தம் செய்யும் செயலை அறவே துறந்து விடுகின்றனர். மனதுக்கு சிறிதளவு கவனம் செலுத்தினாலே எவ்வளவு அருமையாகவும், இன்பமாகவும் இருக்கும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை.

இரண்டாவதாக, பலர் முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். உலக இன்னல்களில் மாட்டிக் கொண்டு, தங்களுக்கு ஒரு சிக்கலான வலையொன்று பின்னிக் கொள்கிறார்கள். கீழ்மையான செயல்கள் செய்வதால் என்னென்ன தீமைகள் வரும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதிலை. மேலும் அவர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள விரும்புவதில்லை. உதாரணமாக, நமக்கு ஒரு மருத்துவர், நமது நோயை முற்றிலும் சரி செய்வதற்காக, கசப்பான மருந்தொன்று சில மாதங்கள் உட்கொள்ள தருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நம்மில் சிலர் இந்த மருந்தை ஏற்றுக் கொள்வதை விட, நோயிலேயே வழக்கம் போல் உழன்றுக் கொண்டு இருப்பதை விரும்புகின்றனர். அறிவின்றி வாழ்வதும் இது போல் தான். விநோதம் தான், ஆனால் உண்மை. நம்மை ஏமாற்றி நமது புத்தி இந்த தந்திரத்தை நமக்கே காட்டி விடுகிறது. நம்மை சீர் கெட்டச் செயல்களை செய்ய வைத்து, அந்த பழியைக் கடவுளின் மீது போட முயல்கிறது! இறுதியில், நமது வாழ்க்கையின் தன்மைக்கு நாமே தான் காரணம் என்று அறிந்துக் கொள்வது ஓர் இனிய சாதனை தான்.  நமது மென்மையற்ற குணத்தையும் பொறுத்து, இறை பொருள் அதன் கருணையால் காரணமின்றி நமக்கு உதவுகிறது.

உலகையும் அதன் சம்பவங்களையும் பார்த்தால், உலகின் நடவடிக்கைகளைப் பராமரிக்கவும், சட்டம், முறைமை இவற்றை சரிப்படுத்தவும், “கடவுள்” என்று வழங்கும் ஒரு மேன்மையான சக்தி உள்ளது என்று நம்மில் பெரும்பாலானோர் நம்புவர். உண்மை என்னவெனில், இந்த அற்புத கடவுள் பயங்கரமானதில்லை. அது, உண்மையான ஒரு நண்பரைப் போல் நமத விவகாரங்களில் தலையிடாமல், தேவைப்படும்போது உதவி செய்ய எப்போதும் உறைகிறது.

கடவுள் இத்தகைய சிறந்த நண்பர் தான், இது உண்மை. அன்பும் கருணையும் கொண்ட இந்த கடவுள் நாம் பணிவுடன் அழைக்கும் போது, உடனே ஓடி வருகிறது. எந்த விதத்தில், எந்தப் பெயரில் அல்லது ரூபத்தில் நாம் வழிபாடு செய்தாலும் கடவுள் நமது விசுவாசமுள்ள நண்பர் தான். கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் கடவுளும் அன்பும் ஒன்று தான்!

நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான்
எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது...
Vasundharaகடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *