‘Ghazal’: கஸல் என்றால் என்ன? ஒரு வித கவர்ச்சியான இசை
இங்கு ஓர் சிறிய வர்ணனை வழங்குகிறேன்.
சுருக்கமாக சொல்லப் போனால் கஸல் என்பது பல கவிதை அடிகள் அல்லது செய்யுள்கள் கொண்ட ஓர் கவிதையாகும். ஓவ்வொரு செய்யுளிலும் இரண்டு வரிகள் இருக்கும். ஒவ்வொரு செய்யுளும் அல்லது வரிசையும் தானாகவே ஒரு தனி கவிதை போல் இருக்கும்.
வழக்கமாக ஒவ்வொரு வரிசையிலும் தனித் தனி பொருள் இருக்கும். உதாரணமாக, முதல் வரிசை உண்மை அன்பைப் பற்றி இருக்கலாம், இரண்டாவது துரோகமான நட்பைப் பற்றி இருக்கலாம், மூன்றாவது இந்த இரண்டை விட முற்றிலும் வேறு விஷயத்தைப் பற்றி இருக்கலாம். ஆனால், எல்லா வரிசைகளும் ஓரே பொருளைப் பற்றியும் இருக்கக் கூடும்.
ஒரு கஸல் பின்வரும் விதிகளை பின்பற்றும்.
‘ஒரே அளவு’ (கவிதையின் எல்லா வரிகளும் ஒரே அளவு இருக்க வேண்டும்),
கவிதையின் முதல் வரிசையில், இரண்டு வரிகளிலும் ‘ஒரே முடிவு சோல்’ இருக்க வேண்டும்,
மற்ற வரிசைகளின் இரண்டாவது வரிகளில், ‘ஒரே முடிவு சொல்’ இருக்க வேண்டும்,
ஒவ்வொரு வரியின் கடைசியிலும் ‘எதுகை-மோனை’ ஒரே பாங்கில் இருக்க வேண்டும்,
பெரும்பாலான சமயங்களில், ‘கவிஞரின் பெயர்’, ஏதாவது ஒரு விதத்தில் கடைசி வரிசையில் சேர்ந்திருக்கும்.
ஹார்மோனியம், தபலா இவை தான் வழக்கமாக ஒரு கஸல் கச்சேரியில் உபயோகப்படுத்தப்படும். பெரும்பாலாக பாடகரே ஹார்மோனியமும் வாசித்துக் கொள்வார். ஆயினும், சில புகழ்மிக்க கலைஞர்களுக்கு, ஸாரங்கி, வயலின், ஸிதார், கிதார் போன்ற சங்கீதக் கருவிகளைக் கொண்ட இசைக் குழு அமைக்கப் படுகிறது.
சுருக்கச் சொன்னால், கஸல் என்பது சில விதிகளை பின்பற்றி, எதுகை-மோனையுடன், உணர்ச்சியுடன் அமைந்த ஒரு பாடலாகும். இது ஒரு சாதாரணமான கவிதையாகலாம், அல்லது கடினமான விதிகளையும், சொற்களையும், எதுகை-மோனைகளையும் பயன்படுத்தி அமைத்த கவிதையுமாகலாம். இந்த கஸல் கவிதைகள் வழக்கமாக மெதுவாகவும், மிகவும் இனிமையாகவும், இயற்றப் படுகின்றன. தற்காலத்தில் சில சிறிது வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயற்றப் படுகின்றன.
கஸலின் ஓர் அழகிய அம்சம் என்னவென்றால், அது பாடகருக்கு ராகங்களை இணைத்து பாட சுதந்திரமும் வாய்ப்பும் தருகிறது. கண்டிப்பான விதிகளைக் கொண்ட தூய இசை மரபில் இது இயலாது. பொதுவில், இந்த கவிதைகள் தூய சங்கீத ராகங்களைச் சார்ந்து தான் இயற்றப் படுகின்றன. இந்த இசை கேட்கக் கேட்க மேலும் மேலும் இன்பகரமாக இருக்கும்.
நீங்களே கேட்டுப் பாருங்களேன், உங்களுக்கு இது பிடிக்கிறதா இல்லையா என்று! ஆனால் நீங்கள் இவற்றைக் கேட்கவே முயற்சி செய்யாவிட்டால், ஒருவேளை ஒரு நல்ல புது இசை அனுபவம் கிடைக்காமலே போய் விடும், அல்லவா?