எனக்கு இந்த ஆச்சரியத்தில் ஒரு முடிவே இல்லை: நாம் மற்றவைகளை விட நம்மை தான் மிகவும் நேசிக்கிறோம், ஆனால் நமது அபிப்பிராயத்தை விட மற்றவர்களின் அபிப்பிராயத்தில் அதிக நம்பிக்கை வைக்கிறோம்.
மார்க்கஸ் ஔரேலியஸ்
எத்தனை சிந்தனையார்ந்த, விளக்கமான வாக்கியம் ! பல சந்தர்ப்பங்களில் இது உண்மையும் தான், இல்லையா ?
நம்மில் பலருக்கு அவர்களது இயல்பான தன்மையிலேயே தன்னம்பிக்கை, மனத்துணிவு போன்ற தன்மைகள் உள்ளன. அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் தைரியமாக தமது முடிவை தாங்களே நிர்ணயித்து செயலில் ஈடுபட முடிகிறது.
ஆனால் மற்றும் சிலர் நமது வாழ்க்கை முழுதும் நம்மைப் பற்றி மற்றவர்களின் கருத்துகளுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்தே வாழ்கிறோம். அவர்கள் நம்மைப் பற்றியும், நமது குடும்பம், வீடு, தொழில், நிலமை, அந்தஸ்து, இன்னும் பல விஷயங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று கவலைப் படுகிறோம். இதற்கு ஒரு காரணம், நமக்கு அவர்கள் மீதுள்ள அன்பு. அதை விட முக்கிய காரணம், அவர்களிடமிருந்து அன்பு, நட்பு, மதிப்புயர்வு – இவற்றை நாம் எதிர்பார்ப்பது தான் என்று நான் உணர்கிறேன்.
தவறாக எண்ண வேண்டாம்! குழந்தைகள் உள்பட மற்றவர்களின் பேச்சையும் கருத்துக்களையும் கேட்பதில் தவறொன்றும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் அது மிகவும் உபயோகமாக இருக்கக்கூடும். அறிவு வாய்ந்தது கூட. ஆனால் ஒரு வரையறை என்னவெனில், அந்த கருத்துகளை எடுத்துக் கொள்ளவோ அல்லது விட்டு விடவோ முடியும் மனப்பான்மை இருக்க வேண்டும். அவர்களின் கருத்துகளுக்கு அளவுக்கு மிஞ்சிய கவனம் செலுத்தக் கூடாது. சொல்வது எளிது தான்! பின்பற்றுவது கடினம்.
சுயமரியாதை இல்லையெனில் நமக்கு நம்மீது நம்பிக்கையும் மனத்துணிவும் இருப்பதில்லை. நான் சில பெற்றோர்களை கவனித்ததில் ஓரிரு விஷயங்கள் புரிந்துக் கொண்டேன். சில குழந்தைகளுக்கு பெற்றோர்களின் கவனமும் அன்பும் மிகவும் தேவைப்படுகிறது. அவை கிடைக்காவிடில், அவர்களுக்கு ஒரு தாழ்ந்த மனப்பான்மை உண்டாகிறது. நான் ஒரு உதாரணம் தருகிறேன். வெளியூரிலிருந்து எனது சிநேகிதி என்னுடன் ஓரிரு நாள் தங்குவதற்காக வந்தாள். அவளுடைய இரு வயது குழந்தையின் மிகவும் இனிப்பான குணமும், பண்புள்ள நடத்தையும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்கள் இன்னும் ஓரிரு நாட்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
இரு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் திரும்பவும் வந்த போது என் சிநேகிதிக்கு மிக சிறிய இரண்டாவது குழந்தை இருந்தது. இந்த முறை முதல் சிறுவனின் நடத்தை முற்றிலும் வேறு விதமாக தோன்றியது. முரண்டு பிடித்தவாறு, அழுதுப் புரண்டு பிடிவாதம் செய்து வந்தான். எவ்வளவு சிறந்த குழந்தை எப்படி இது போல் மாற முடியும் என்று வியந்தேன்! பிறகு ஒன்றை நான் கவனித்தேன். எல்லோருடைய கவனமும் இரண்டாவது குழந்தையின் மீதே இருந்தது. அவர்களின் இல்லத்திலும் பெற்றோரும் உற்றாரும் நண்பரும் புதுக் குழந்தையைப் பாராட்டுவது தான் வழக்கம். முதல் சிறுவன் அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் மிகவும் ஏங்கியதால், மறறவர்களின் கவனத்தை தன் மீது திருப்பத் தான் விசித்திரமாக நடந்துக் கொள்கிறான் என்று புரிந்தது. இரண்டாவது குழந்தை வருவதால் அவர்களூக்கு முதல் சிறுவன் மீதுள்ள அன்பு குறையாது என்று பெற்றோர் அவனுடன் பேசி அவனை தயார் செய்யவில்லை என்பது எனக்கு சந்தேகமின்றி விளங்கியது.
சில குடும்பங்களில் அதிகமான பாதுகாப்பு தருவது வழக்கம். இதனால் இள வயதிலிருந்தே சமூகத்தில் ஈடுபட்டு சிறு சிக்கல்களையும் இன்னல்களையும் எதிர்க்கும் அனுபவும் கிடைக்காமல் போகிறது. பெற்றோர் இளைய சிறுவருக்கும் சிறுமிகளுக்கும் வழிகாட்டி, சமூகத்தில் ஈடுப்படுத்தி, வாழ்க்கையில் அனுபவம் கிடைக்க உதவி செய்தால் குழந்தைகள் சிறப்பாகவும், மனத் துணிவுடனும் வளர வழி அமையும்.
மற்றவர்களின் அபிப்பிராயத்தையே சார்ந்து இருப்பது காலம் செல்லச் செல்ல ஓரு வழக்கமாகி விடக் கூடும். நமது பல தொல்லைகளும் இன்னல்களும் நமது பழக்க வழக்கங்களால் தான் என்று நான் நினைக்கிறேன். நமது சூழ்நிலைகளை நம்மால் மாற்ற முடியாமலிருக்கலாம். ஆனால் நமது மனப் போக்கை நாம் நிச்சயம் மாற்ற முடியும். எந்த சிக்கலையும் தீர்க்க ஒரு வழி உண்டு என்று நான் நம்புகிறேன்.