இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை
இந்து மதத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்ததைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.
இந்து மதம் உண்மையில் ஒரு மதமில்லை
முதலாவதாக, இந்து மதம் ஒரு மதமே இல்லை. அதை இந்துத்துவம் என்று சொல்வது தான் சரியானது. ஆனால் “இந்து மதம்” என்று பொதுவில் வழங்கி வருவதால் அந்த சொற்றொடரை இங்கு உபயோகிக்கிறேன். இந்து மதம் இந்தியாவின் பல சம்பிரதாயங்கள், கலாச்சாரங்களின் கலந்திணைப்பு. அது காலந்தோரும், குரு-சீடர் என்னும் பாரம்பரியத்தில், தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும் “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. இந்தியாவில் கணக்கில்லாத ஞானிகளும், சான்றோர்களும், புனித மறைநூல்களும், தமிழ் மொழி உள்பட எல்லா மொழிகளிலும், கடந்த காலத்திலும் இருந்தன, இன்றும் உள்ளன, இனிமேலும் இருந்து வரும். இந்துத்துவத்தின் சக்தியினால் மகாத்மா காந்தியடிகளுக்கு, அகிம்சை முறையில், தமது தன்னலமற்ற தியாகத்தினால் ஆங்கில பேரரசை நாட்டை விட்டே துரத்தும் திறமையும், மன திடமும் வந்தது. அவர் நாட்டின் மக்களை ஒன்று படுத்தி, “முதலில் நாம் இந்தியர், பிறகு மற்றவை எல்லாம்” என்று உணர்த்த அரும் பாடுபட்டார். மதத்தைத் தவறாகப் புரிந்துக் கொண்டதால் விளைந்த அறியாமையையும், இன்னல்களையும் நீக்க சிரமப்பட்டு உழைத்தார். உலகத்துக்கே நற்குணங்களுக்கு உதாரணமாக விளங்கினார்.
இந்தியாவின் மொழிகளும், உணவுகளும், சடங்குகளும், வழக்கங்களும், வழிபாடு முறைகளும், இந்தியாவின் வித விதமான மாநிலங்களில் வேறுபட்டு இருக்கலாம். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக, அழிக்க முடியாத அஸ்திவாரமாக, இரத்தினங்களையும், முத்துக்களையும் இணைத்து ஆதாரம் அளிக்கும் கழுத்தணி மாலையைப் போல இந்து மதம் உறைகிறது. ஜனங்கள் இவ்வுலகில் வரலாம், போகலாம்; சிலர் இந்து மதத்தை கேலி செய்யலாம்; சிலர் மதித்துப் போற்றலாம். ஆனால் இந்துத்துவத்தின் தார்மீக மதிப்பீடுகள் இருந்துக் கொண்டே இருக்கும்.
பண்டையது, பழமையானது
மனிதரின் ஆயுள் சுமார் 100 வயது. ஆனால் இந்து மதம் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால், மற்ற மதங்கள் தொன்றுவதற்கு மிகப் பல காலத்திற்கு முன்பு தோன்றி, வழங்கி வந்ததாகும். அது இந்தியாவில் வெளியோரின் பெரும் படையெடுப்புகளையும், பெருங்கேடுகளையும், நெருக்கடி சூழ்நிலைகளையும் கடந்து பிழைத்துள்ளது. கிரேக்க, ரோம கலாச்சாரங்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனல் இந்துத்துவம் காலத்தின் பரிட்சைகளை வென்று வந்துள்ளது. எனவே, இந்து மதத்தைப் பற்றி கவலைப் பட்டு, அதைக் காக்க ஒருவர் முயல்வது, சமுத்திரத்தின், பெருங்கடலின் ஒரு தண்ணீர் துளி, பெருங்கடலைப் பற்றி கவலைப் பட்டு காக்க முயல்வது போன்றதாகும். மேலும், மதம் கடவுளைப் பற்றியதாகும். எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு எல்லோரையும், எல்லாவற்றையும் எப்படி பார்த்துக் கொள்வது, எந்த விதத்தில் காப்பது என்று தெரியும்.
இந்து மதம் உலக முழுதளாவியது
மற்ற மதங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு மட்டுமே விமோசனம் தருவதாக சொல்கின்றன. ஆனால், இந்துத்துவம் மதங்களின் எல்லைக்கு அப்பால், உலகில் எல்லோருக்கும் விமோசனம் பெறும் அறிவுரைகளும், நடைமுறைகளும் அளிக்கிறது. அவரவர்கள் வசிக்கும் இடஞ்சார்ந்த இந்து மத வழிபாடுகளும், சடங்குகளும் உள்ளன; ஆனால் அதனுடன் எல்லொருக்கும், எந்த மதம், இனத்தைச் சார்ந்தவருக்கும், மன அமைதியும் ஆன்ம முக்தியும் விமோசனமும் தரும் வேதாந்த அறிவும், வழிகாட்டுதலும் உள்ளன. ஆன்ம அமைதியும் சாந்தியும் மனதில், உள்ளத்தில் உணர்வதாகும்; அதனால் மதத்தின் வெளிப்புற சமய விதிகள் அவசியமில்லை. வெளிப்புற தோற்றத்தினாலும், உடை, மற்ற அலங்காரங்களினால் ஒருவர் இந்து இல்லை. இந்துத்தவத்தின் நேர்மையான கொள்கைகளை கைப்பிடித்து பின்பற்றி, வசிக்கும் இடத்தின் நடைமுறைகளுக்கு தகுந்தவாறு வாழ்பவர் தான் இந்து ஆகிறார். ஆடை அலங்காரங்களும் வழிபாடுகளும், கடவுளைப் பற்றி நினைப்பதற்கு ஒரு ஊக்குவிப்பும், குழந்தைகளுக்கு உற்சாகமும் அளிக்கிறது, உண்மை தான், நல்லது தான். ஆனல், ஆன்மீகத்திற்கு இவை குறிக்கோள் இல்லை.
மத மாற்றம் அவசியமில்லை
மற்ற சில மதங்களைப் பின்பற்றுபவர்கள் பிற மதங்களின் பக்தர்களை தங்கள் மதத்துக்கு மாற்ற முனைவதுடன், வற்புறுத்தவும் செய்கின்றனர். தங்கள் புது மதத்தில் ஏற்பட்ட உற்சாகத்தினால், அவர்கள் அதை பரப்ப அளவுக்கு மீறிய கிளர்ச்சி கொள்கின்றனர். தான் அடங்கி அமைதியாக இருப்பதைத் தவிர்க்க, மற்றவரைச் சீர்திருத்த முயல்வது மனிதரின் தன்முனைப்பின் (ego-வின்) தந்திரமாகும். அல்லது, தமது மதத்தைப் பற்றி தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், மற்ற மதங்களை ஏசுவார்கள், கேலி செய்வார்கள், நிந்திப்பார்கள், கெடுதல் செய்ய நினைப்பார்கள், மற்றவர்களை தமது மதத்திற்கு மாற்றவும் முயற்சி செய்வார்கள்.
ஆனால் தமது மதத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள் இவை எதையும் செய்ய மாட்டார்கள். இந்துக்கள் மனோபலம் உள்ளவர்கள். அவர்கள் இந்து மதத்தைப் பற்றி உறுதிவாய்ந்த மரியாதையும் நம்பிக்கையும் கொண்டவர்கள். அவர்களுக்கு மற்றவர்களை நம்ப வைக்கவோ, மாற்றவோ தேவையே இல்லை, மாற்றும் முறைப்பாடும் கிடையாது. மேலும், எல்லோரும், யாராக இருந்தாலும், உலகில் எங்கு வாழ்ந்தாலும், மத மாற்றம் செய்யாமலே, இந்துத்துவத்தின் கொள்களை கடைப்பிடிக்கலாம். ஏனெனில், இந்து மதம் ஒரு வாழ்க்கை வழி முறை தான். எனவே, மற்ற மதத்தைச் சேர்ந்த சிலர், அறியாமையால் சொல்வதையும் செய்வதையும் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். எல்லா முக்கிய மதங்களிலும் நல்லது உள்ளது, நல்லவர்களும் உள்ளனர். நல்லதை எடுத்துக் கொண்டு, மற்றதைப் புறக்கணிப்பது தான் உசிதம்.
இந்து மதம் சாதிகளை உண்டாக்கவில்லை
கல்லூரியில் ஒரு பட்டம் கிடைக்க ஒருவர் சுமார் 20 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். ஆனால் ஒரு மதத்தைப் பற்றி தவறான முடிவுகள் செய்ய சில மணி நேரங்களே கழிக்கிறார்.
இந்து மதம் சாதிப் பிரிவுகளை உண்டாக்கவில்லை. அசலான சமூக வகைப்பாட்டின் படி (Varnasrama), சமூகம் எல்லொருடைய சுய ஒத்துழைப்புடன், நான்கு தன்மைகளிலும், நான்கு வாழ்க்கை நிலைகளிலும் வகுக்கப் படுகிறது.
ஒருவருடைய சுய தன்மை (Varna), அவரது குணம், பண்புகள், தொழில், வேலைப்பயிற்சி முதலிய விசேஷ குணங்களைக் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது – ஒருவரின் பிறப்பினாலும், நிறத்தாலும் நிர்ணயிக்கப் படுவதில்லை. இந்த சமூக வகைப்பாட்டின் நோக்கம் என்னவென்றால், சமூகத்தின் ஒவ்வொரு மனிதருக்கும் நல்வாழ்வும், ஆன்ம அபிவிருத்தியும், மன அமைதியும் கிடைப்பதின் மேல் கவனம் செலுத்துவது தான்.
திரு சுவாமி சின்மயானந்தாவின் படி – “பகவத் கீதை மனிதர்களை, அவர்களின் மன நாட்டங்கள், விருப்பங்கள், தொழில் திறமைகள் – இவற்றின் அடிப்படையில், நான்கு வித தன்மைகள் கொண்ட நான்கு பிரதான வகுப்புகளை நிர்ணயித்துள்ளது. ஆனால் இது தவறாக புரிந்துக் கொள்ளப் பட்டுள்ளது. இத்தகைய வகுப்புகள்/சாதிகள் எல்லா தேசங்களிலும், எல்லா கலாச்சாரங்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் உறைகின்றன. அவை – ஆன்மீகர்கள், நாட்டை ஆளுவோர்/அரசர், வியாபாரிகள், மற்றும் இவற்றில் உள்படாத எல்லா தொழில் வல்லுனர்களும், உழைப்பாளிகளும் ஆவர். இதன்படி, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மற்ற தொழில் வல்லுனர்கள், இவர்கள் எல்லோரும் நான்காவது வகுப்பைச் சார்ந்தவர்கள். சாதிகள் கலக்கக் கூடாது என்பதன் பொருள், உதாரணத்துக்காக, “வழக்கறிஞர் ஒருவர் மருத்துவரின் வேலையைச் செய்யக்கூடாது” என்பது தான். அதாவது, ஒருவர் தமது சுய தன்மையின் படி செயல்பட வேண்டும், மற்றவரின் தன்மைப் படி அல்ல.“
சிலர் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அறியாமையால் உயர்வு தாழ்வென்னும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கலாம். அல்லது, வெளி நாட்டவர், ஆங்கிலேயர், இந்தியர்களுக்குள் பிரிவுகளும், முரண்பாடுகளும் உண்டாக்கி, “ஜனங்களை பிரித்து வெல்லுதல்” என்ற முறையில் வித்தியாசங்களை ஊக்குவித்து வலிமைப் படுத்தியிருக்கலாம். எதுவானாலும், இந்த காரணங்களுக்காக இந்து மதத்தை எவரும் வெறுக்கக் கூடாது. மேலும் இந்துக்கள் தமது மேன்மையான மரபையும், நமக்காகவும், நமது குடும்பம், சமூகம் இவற்றின் நலனுக்காகவும் உள்ள இந்து மதத்தின் மிகச் சிறந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் இழந்து விடக் கூடாது. இழந்தால் அவர்கள் தான் தோல்வி அடைவார்கள். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது, “குழந்தையைக் குளிப்பாட்டியதால் அழுக்கடைந்த தண்ணீரை தூக்கி எறியும்போது, குழந்தையையும் தூக்கி எறியாதே”. இதன் பொருள், “பிடிக்காததை விட்டு விடும்போது, நல்லதையும் விட்டு விடாதே.”
இந்து மதத்தை சரியான முறையில் பிரபலப் படுத்துவோம்
இந்து மதத்தைப் பரப்புவதற்காக ஒவ்வொரு தெருவோரத்திலும் கோயில்களும், வழிபடும் இடங்களும் அமைப்பதால் ஒருவர் உண்மையான இந்து என்று அர்த்தமில்லை. மேலும் அது இந்து மதத்தின் மகத்துவத்தைக் குறைக்கவும் செய்யலாம். இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும், நகரத்திலும், ஏற்கனவே பழமையான மாபெரும் கோவில்கள் பண்டைய கால அரசர்களால் அமைக்கப் பட்டு, மேன்மையான ஞானியரால் அருளப்பட்டு உறைகின்றன. உலகின் மற்ற இடங்களில், ஆங்காங்கே ஓரிரு கோயில்கள் அல்லது வழிபடும் இடங்கள் இருந்தால், அது போதும். இவற்றுக்கு அடிக்கடி சென்று வந்து, சுத்தமாக வைத்து, பராமரித்து, அவரவரது நிலையின்படி செல்வத்தாலும் அல்லது மற்ற விதத்தில் சேவை செய்வதாலும் ஆதரித்தால், இதுவே இந்து மதத்தை நிலைநாட்ட மிகப்பெரிய உதவியாகும். மேலும், கடவுள் பரம்பொருளானதால், எங்கும் நிறைந்திருக்கும் சக்தி. நாம் இறைபொருளை எங்கும் எப்போதும் மனதில், உள்ளத்தில் வழிபடலாம்; வீட்டிலேயே வணங்கலாம்.
எல்லவற்றையும் விட மிக முக்கியமாக, இந்து மதத்தின் கருத்துக்களை வாழ்வது – அதாவது, எந்த பாலினம், மதம், இனம், சாதியைச் சேர்ந்தவர்களானாலும், மற்றவர்களை அன்புடன், நட்புடன் நடத்துவது, மிருகங்களுக்கு கருணை காட்டுவது, தமது தொழிலைச் சிறந்த முறையில் செய்வது, நேர்மையைக் கடைப்பிடிப்பது – இவை தான் இந்து மதத்தைப் பிரபலப்படுத்த சரியான, விளைவுள்ள வழி முறைகளாகும்.
மேலும், மதிப்பிற்குரிய இறைவன், தேவி, ஞானியர், புனிதர் இவர்களை மரியாதை நிறைந்த முறையில், சினிமாவிலும், வீடியோவிலும், இணையதளத்திலும், வலைதளத்திலும் காண்பிப்பது மற்ற மதத்தினரின் மதிப்பை இந்து மதம் பெற உதவும். நாம் நம்மை எவ்வளவு மதிக்கிறோமோ அவ்வளவு தான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்.
எனவே, நாம் எங்கு வாழ்ந்தாலும், மனிதராகவும் இந்துக்களாகவும் தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். தாழ்வு மனப்பான்மைக்கு இடமே கொடுக்காமல் வாழ்வோம். சந்தேகம் ஏதாவது ஏற்பட்டால், அவசர முடிவு செய்வதற்கு பதிலாக, பகுத்தறிவை உபயோகித்து விசாரணை செய்து முடிவு செய்வோம். இந்து மதத்தின் நற்குணங்களை சிறந்த முறையில் உபயோகித்து, நம்மால் ஒப்புக்கொள்ள முடியாததை புறக்கணிப்போம். இந்துத்துவத்தின் மதிப்பீடுகளை தற்காலத்துக்கு தகுந்தபடி வாழ்ந்து காட்டி பிரபலப்படுத்துவோம்.
மதம் என்ற சொல்லின் உண்மைப் பொருள் “சொந்த அபிப்ராயம்” என்பதாகும். நாம் நமது மதத்தைப் பின்பற்றி வாழ்வோம், மற்ற மதத்தினரை அவர்கள் வழியில் வாழ விடுவாம். நாம் மதவெறியர்களாக இருக்க வேண்டாம்.
அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் இந்துக்களாகவோ அல்லது இந்துத்துவத்தை விரும்பும் அன்பர்களாகவோ சந்தாஷமாக வாழலாம், நண்பர்களே!