God

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

Vasundhara ஆன்மீகம் Leave a Comment

இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை

God

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

 

இந்து மதம்

முதலாவதாக, இந்து மதம் ஒரு “மதம்” இல்லை. அது ஒரு “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. ஆனால் பொதுவில் இந்து மதம் என்று அழைக்கப் பட்டு வழங்கி வருகிறது. “மதம்” என்ற சொல்லின் உண்மையான பொருள் “சொந்த அபிப்ராயம்”. 

கடவுள்: சகுணமா? நிர்குணமா?

உண்மையில், இந்து மதத்தில் மிக உயர்ந்த மேன்மையான இறைபொருள் என்னவென்றால், குணங்கள், இயற்பண்புகள் ஒன்றும் இல்லாத நிர்குணமான கடவுள் தான். எனவே, நாம் இந்த விதத்தில் மட்டுமே கடவுளை வணங்குவது தான் சரியா? அல்லது பரம்பொருளை உருவத்தோடும், பெயரோடும், நாம ரூபத்தோடும் சகுண வழிபாடு செய்வது சரிதானா? இந்து மதத்தில் எத்தனையோ ஆண்டவர், தேவி வடிவங்களும், பெயர்களும், குறியீடுகளும், சின்னங்களும், தன்மைகளும், வழிபடும் முறைபாடுகளும் வழங்கி வருகின்றன. ஏன்? எதற்காக? இத்தகைய கேள்விகள் பல பேரின் மனதில் எழுகின்றன, குழப்பம் தருகின்றன.

எனது கருத்து என்னவெனில், இந்த இரண்டு வித வழிபாடுகளும் நல்லவை தான். அவை அவரவர்களின் வாழ்வு நிலை, ஆன்மீக முன்னேற்றம், சுய தன்மைகள், விருப்பங்கள், இவற்றிற்கு தகுந்தபடி தேவைப்படுகின்றன என்று நான் கருதுகிறேன். வாழ்வில் வெவ்வேறு இன்னல்களுக்கு வெவ்வேறு தீர்வுகள் தேவைப்படுகின்றன. 

உதாரணமாக பலவிதமான வயதும் அறிவாற்றலும் உள்ள மக்களைக் கொண்ட ஒரு நகரத்தை எடுத்துக் கொள்வோம்.  அதில் நமது குறிக்கோள், கல்லூரியில் இருப்பதற்குள் மிக உயர்ந்த பட்டம் எதுவோ அதை அடைவது தான் என்று வைத்துக் கொள்வோம். அரிய சிலர், தமது அபூர்வமான திறமையினால், குழந்தைப் பருவத்திலேயே அல்லது மிக இளவயதிலேயே எளிதில் இந்த பட்டத்தைப் பெறலாம். ஆனால், சாதரணமாக பொது வாழ்வில், குழந்தைகள் அகர வரிசைகளையும், எண்களையும் கற்க முதல் வகுப்பில் தான் கல்வியைத் தொடங்குவர். அவர்களால், அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் அளிக்கப்படும் பாடங்களைப் முதலிலேயே புரிந்துக் கொள்ள முடியாது. உயர்நிலைப் பள்ளியின் வகுப்புகளில் உள்ள மாணவர்களால் கல்லூரியில் வழங்கப்படும் கல்வியைப் புரிந்துக்கொள்ள இயலாது. இளநிலை பயில் கல்லூரி மாணவர்களால், எல்லாவற்றிலும் உயர்ந்த பட்டம் பெறும் கல்வியை நேரடியாக புரிந்துக் கொள்ள முடியாது. 

எனவே, இந்த நகரில் மிக உயர்ந்த பட்டம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாலும், அது தான் நமது குறிக்கோள் என்பதாலும், கல்வி பெறும் மற்ற நிலைப்படிகளை எல்லாம் விட்டு விட்டு, அவர்களுக்கு அதற்கேற்ற தகுதியும் திறமையும் இல்லாவிட்டாலும் கூட, எல்லோருமே நேராக உயர்ந்த பட்டம் கிடைக்கும் கல்லூரியில் சேருவதால் பலனுண்டா? அல்லது விஞ்ஞானத்தைக் கற்க விருப்பமுள்ளவர், கணிதத்தினால் அதைக் கற்க முடியுமா? உண்மை என்னவெனில், ஒவ்வொருவரும் அவரவர்களின் வயது, ஆற்றல், திறமை, விருப்பம், மன இயல்பு, இவற்றின் இணைவுப் பொருத்தத்துடன் ஒப்பும் வழிமுறைகளில் தான் முன்னேற்றமடைய முடியும். முன்னோட்டமான படிகளில் தயாரான பிறகு, அவர்கள் தமது மிக உயர்ந்த குறிக்கோளை நாடி பயிற்சி செய்யலாம். எனவே, ஒரு நகரத்தில் முதல் வகுப்பிலிருந்து உயர்ந்த கல்விவரை கற்கும் வாய்ப்புகளும் முறைபாடுகளும்  இருக்கவேண்டும். 

இதே விதிகள் மதத்துக்கும் ஆன்மீகத்துக்கும் பொருந்துகின்றன. பொதுவில் எல்லோராலும் கடவுளை குணங்கள், இயற்பண்புகள் ஒன்றும் இல்லாத ஆழ்ந்த அமைதி வாய்ந்த பரம்பொருளாக வழிபட இயலாது. இந்து மதத்தில் உள்ள “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை” (சநாதன தர்மம்), எல்லோருக்கும் அவரவர்களுக்குத் தகுந்தபடி, வாழ்வின் வெவ்வேறு நிலைப் படிகளில், மற்றவருக்குத் தீங்கிழைக்காமல், கடவுளை பலவித வழிகளில் வழிபட வாய்ப்புக்கள் அளிக்கிறது.  ஒருவர் தமது ஆழ்நிலை, தன்னிலையை உணர்தல் வேண்டும் என்பது இறுதி குறிக்கோளாக இருந்தாலும், அதற்குத் தயார் ஆவதற்காக பலவித தெய்வீக வழிமுறைகள் வழங்குகிறது. கடவுளை வழிபட வேண்டும் என்பது தான் பிரதானம், இது எல்லோருக்கும் பொதுவானது. எப்படி வழிபடுகிறோம் என்பது அவரவரது சொந்த விருப்பம்.

பரம்பொருளை உருவமின்றி, பெயரின்றி நினைப்பது சுலபமில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு அது மிகவும் கடினம். கடவுளை தமது விருப்பப்படி ஒரு புனிதமான உருவத்தில் மனதில் பதித்து, தெய்வீகமான பெயரில் அழைத்து வழிபடுவது சற்று எளிது. மேலும், ஒருவர் முதலில் இப்படி சகுண வழிபாட்டில் ஈடுபட்டாலும், அவரே சில காலத்திற்கு பிறகு, நிர்குண வழிபாட்டை விரும்பி மாறலாம். பூஜை, ஜபம் போன்ற செயல்களை விட ஆழ்நிலை ஆய்வில் ஈடுபடுவதை அவர் விரும்பலாம். இந்து மதத்தில் இவை எல்லாவற்றிற்கும் வழி காட்டிகள் உள்ளன. அது பூரணமான மதம். அது யாரையும், ஆன்மீகத்தில் எந்த நிலையில் உள்ளவரையும், அவர்களுக்குத் தகுந்த வழிமுறைகள் அளிக்காமல் தவிக்க விடுவதில்லை.  

சுருங்கச் சொன்னால், சகுண நிர்குண வழிபாட்டைப் பற்றி மபெரும் ஞானியான திரு ரமண மகரிஷி பின்வருமாறு சொல்கிறார்.

பக்தர்: கடவுளுக்கு உருவமுண்டா?
மகரிஷி: யார் அப்படி சொல்கிறார்கள்?

பக்தர்: சரி, கடவுளுக்கு உருவமில்லை என்றால், கடவுளை தெய்வச்சிலையாக வழிபடுவது சரியா?
மகரிஷி: கடவுளை விடுங்கள், ஏனெனில் அவர் அறியப்படாதவர். உங்களைப் பற்றி என்ன? உங்களுக்கு உருவமுள்ளதா?

பக்தர்: ஆமாம்.
மகரிஷி: எனவே, நீங்கள் கால் கைகளுடன், மூன்றரை முழம் உயரத்துடன், தாடியும் வைத்துள்ள மனிதர். இது உண்மையா?

பக்தர்: கட்டாயமாக.
மகரிஷி: அப்படியானால், ஆழ்ந்த தூக்கத்தில் இப்படி உங்களைக் காண்கிறீர்களா?

பக்தர்: இல்லை. ஆழ்ந்த தூக்கத்தில் நான் ஸ்தூல சரீரமில்லாத நுட்பமான ஜீவன்.
மகரிஷி: பார்த்தீர்களா! நீங்கள் உண்மையில் உருவமற்றவர். ஆனால், தற்போது உடலுடன் ஐக்கியமாகி உருவம் கொண்டுள்ளீர்கள். உருவமற்ற நீங்கள் உருவத்தோடு இருக்கும்போது, உருவமற்ற பரம்பொருளை உருவமுள்ள கடவுளாக ஏன் வழிபடக் கூடாது?

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
25th டிஸம்பர், 1935
உரையாடல் 121.

~~~~~~~~

திரு ரமண மகரிஷியுடன் இன்னுமொரு உரையாடல் பின்வருமாறு.

பக்தர்: தெய்வச்சிலை வழிபாடு நல்லதாகத் தோன்றவில்லை. இஸ்லாம் மதத்தில் முகம்மதியர்கள் உருவமற்ற கடவுளை வழிபடுகிறார்கள்.
மகரிஷி: அவர்களுக்கு கடவுளைப் பற்றிய கருத்து என்ன?

பக்தர்: இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள தன்மை.
மகரிஷி: இப்படி கருதினாலும் கடவுள் ஒருவித இயற்பண்பு அல்லது தன்மை கொண்டவர் தானே? உருவம் என்பது ஒரு வித பண்பு தான். ஏதாவது ஒரு கருத்துத் தோற்றம் இல்லாமல், கடவுளை ஒருவர் வழிபட முடியாது. எந்த விதமான பாவனையும் கடவுளை சகுணமாக குறிப்பிடுகிறது. மேலும், கடவுளுக்கு உருவம் இருக்கிறதா, இல்லையா என்று உரையாடுவதில் என்ன பயன்? உங்களுக்கு உருவம் இருக்கிறதா என்று கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் கடவுளைப் புரிந்துக் கொள்ளலாம். 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
6th ஏப்ரல், 1937
உரையாடல் 385.

~~~~~~~~

திரு ரமண மகரிஷியுடன் மற்றுமொரு உரையாடல் மேலும் விளக்கம் அளிக்கிறது.

வந்திருப்பவர் மகரிஷியைக் கேட்டார்:
மக்கள் கடவுளுக்கு சில பெயர்களைக் கொடுத்து விட்டு, அந்த பெயர்கள் புனிதமானவை  என்றும், ஒருவர் அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லி ஜபிப்பதால், அவை அவருக்கு நன்மையும் நற்பலனும் அளிக்கும் என்கிறார்கள். இது உண்மையாக இருக்க முடியுமா?

மகரிஷி: ஏன் இருக்கக் கூடாது? உங்களுக்கு ஒரு பெயர் உள்ளது; அதைச் சொல்லி அழைத்தால் நீங்கள் பதில் அளிக்கிறீர்கள். உங்கள் உடல் பிறக்கும்போதே இந்த பெயர் எழுதப்பட்டு பிறக்கவில்லை. மேலும், உடல் தானாக யாரிடமும் எனது பெயர் இன்னின்ன பெயர் என்று சொல்லவில்லை. எனினும், உங்களுக்கு ஒரு பெயர் கொடுக்கப் படுகிறது. அந்த பெயரைச் சொல்லி அழைத்தால் நீங்கள் அந்த பெயருக்கு பதில் அளிக்கிறீர்கள். காரணம், நீங்கள் உங்களை அந்த பெயருடன் இணைத்து, ஐக்கியமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, பெயருக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது; அது வெரும் புனைவு இல்லை. அதே போல், கடவுளின் பெயரும் திறம்பட்டதாகும். பெயரை மீண்டும் மீண்டும் சொல்வது, அது என்ன குறிப்பிடுகிறதோ அதை நினவு கூர்தலாகும். இது தான் பெயரின் பயன். 

இதைக் கேட்ட பின்னும் வந்திருப்பவர் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை. கடைசியில் அவர் விடைபெற விரும்பி, பகவான் திரு ரமண மகரிஷியின் அருளை வேண்டினார். 

ரமணர் வந்திருப்பவரிடம் இவ்வாறு உறைத்தார். “உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அருள் தருவதாக உறுதியளிக்கும் வெறும் சொற்களின் ஒலி உங்களை எப்படி திருப்தி படுத்தும்?”

இருவரும் சிரித்தனர். வருகையாளர் விடைபெற்றார்.

இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை
Vasundharaகடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *