நன்றியே சிறந்த மனப்பான்மை

Vasundhara வாழ்க்கை Leave a Comment

எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது...
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்

நன்றியே சிறந்த மனப்பான்மை

நாம் அனைவரும் சில சமயம் ஏற்கிறோம், சில சமயம் கொடுக்கிறோம். இப்படி தான் உலக நியதி செல்கிறது. மேலும், சிலர் ஏற்பதை விரும்புகின்றனர், சிலர் கொடுப்பதை விரும்புகின்றனர். இப்படி தான் மனிதர்கள் இருக்கிறார்கள்.

நமக்கு ஏதாவது தேவைப்படும் போது யாராவது அதை நமக்கு அளித்தால், நாம் மகிழ்கிறோம். சிலர் நாம் கேட்டால் கொடுக்கின்றனர், சிலர் நாம் கேட்காமலே கொடுக்கின்றனர். இந்த இரண்டு விதத்திலும், கொடுப்பவர் சிலர் சந்தோஷப்படுகின்றனர், ஏற்பவர் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். சாதாரணமாக, ஒரு மனிதருக்கு யாராவது ஒரு குடும்பத்தினரோ, நண்பரோ அல்லது ஒரு அன்னியரோ உதவி செய்தால், “நன்றி” என்ற உணர்ச்சி உண்டாகிறது. இது தான் சமூக நியதி. இயற்கையின் நியதி இப்படிதான் உள்ளது. ஓரு விஷயத்தில் எனக்கு சந்தேகமில்லை : மற்றவர்களுக்கு உதவி அளிப்பது ஒரு காலும் வீணாகாது. அந்த நன்மையை யாராலும் நம்மிடமிருந்து விலக்க முடியாது. உதவி ஏற்பவர்கள் எப்படி நடந்துக் கொண்டாலும், நமக்கு நல்லது தான் நடக்கும்.

ஏற்பவர் தன் மனதில் நன்றியை உணர்கிறார். ஆனால் அதை எந்த விதத்தில் வெளிப்படுத்துகிறார் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. சிலர் தமது நன்றியை வெளிப்படையாக சொற்களாலும், கண்ணீராலும், அரவணைப்பாலும், மற்றவர்களிடம் இதைப் பற்றி அடிக்கடி சொல்வதாலும் காண்பிக்கின்றனர். மற்றும் சிலர், மனதுக்குள் தயாள குணமுள்ளவரையும் அவரது குடும்பத்தையும் மனமார வாழ்த்தியும், அவர்களுக்கு எந்த விதத்திலாவது திரும்பி உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தும், அல்லது எப்போதும் உண்மையான நண்பராக இருந்துக் கொண்டும் தமது நன்றியை காட்டுகிறார்கள். சிலர் ஒரு சிறிய கடிதம் எழுதியும் நன்றி தெரிவிக்கலாம்.

நன்றி மிகவும் அவசியமானாலும், வாழ்க்கையில் பலமுறை “நன்றிகெட்டவர்”, “துரோகி” என்ற சொற்களைக் கேட்கிறோம். எல்லா மொழியிலும் செய்நன்றியைப் பற்றி பல பழமொழிகள் இருந்தாலும், சிலர் நன்றி உணர்வு கொள்வதில்லை.

நான் ஊகிக்கிறேன், ஒருவேளை உதவி ஏற்பதால், ஏற்பவர் தாம் கொடுப்பவரை விட மட்டமானவர் என்று நினக்கிறாரோ என்னவோ. உதவி பெறுவதை அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் ஏற்றுக் கொண்டதை ஒத்துக் கொள்ள மனமில்லை. அவரது பெருமை அதை அனுமதிப்பதில்லை. உண்மை என்னவெனில், நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் உதவி தேவை தான். இதில் பெரிய சிக்கல் என்ன? ஒருவர் இன்னொருவருக்கு உதவினால், இன்னொருவர் மற்றும் வேறொருவருக்கு உதவுவார், அவர் நாலாவது மனிதருக்கு சகாயம் செய்வார். எனவே உதவி பெறுவதில் இகழ்ச்சி ஒன்றும் இல்லை.

ஒன்று சொல்லியாக வேண்டும், கொடுப்பவரில் சிலர் அகந்தையும் இறுமாப்பும் கொண்டவராக இருக்கலாம். சந்தர்ப்ப காரணங்களால், நிர்பந்தத்தால், உதவி ஏற்பவர்களுக்கு இது மிகவும் கடினமான இருக்கும். எனவே இத்தகைய சூழ்நிலைகளில் நாம் நன்றி கொள்ள வேண்டியதில்லை என்று தோன்றுகிறது, இல்லையா? தவறு! ஒவ்வொரு மனிதரும் அவரவரது தன்மைப்படி வாழ்கின்றனர். நமக்கு சரியென்று படுவதைத் தான் நாம் செய்ய வேண்டுமே தவிர, மற்ற எந்த காரணத்தையும் நன்றிக்கு ஒரு விடுவிப்பாக எண்ணக்கூடாது.

உதவி ஏற்பவருக்கு நன்றி உணர்ச்சி அவசியமா இல்லையா என்று நிர்ணயிக்க ஒரு சிறிய விதிமுறையை நாம் பின்பற்றலாம். நாம் உதவி கொடுப்பவராக இருந்தால், என்ன எதிர்பார்ப்போம் ? ஏற்பவர் நன்றி கெட்டவராக இருந்தால் நமக்கு பிடிக்குமா? நமக்கு அவர் துரோகம் செய்தால் நாம் அதை ஒப்புவோமா? இங்கு உள்ளது பதில். நமக்கு அது பிடிக்காது. நாம் அதைப் பொறுத்துக் கொள்ளலாம், சில பெரிய மனமுள்ளவர்கள் மன்னிக்கவும் செய்யலாம். ஆணால் விரும்புவோமா? கட்டாயம் விரும்ப மாட்டோம். அதற்கு முரண்பாடாக, நாம் அவர்களுக்கு அளித்த உதவியை அவர்கள் பாராட்ட வேண்டும், நன்றி காட்ட வேண்டும், எப்போதும் நமது உண்மை நண்பராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். எனவே, இதே போல் தான் நமக்கு உதவி அளிப்பவரையும் நாம் நடத்த வேண்டும்.

மேலே சொன்ன விதிமுறை உலகின் எல்லா விஷயங்களிலும் உண்மையாகும். “மற்றவர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரை நடத்த வேண்டும்.” இந்த ஒரு விதியை நாம் எல்லோரும் பின்பற்றினால், நாம் மட்டுமில்லை, இந்த உலகமே மிக்க சந்தோஷமும் அழகும் கொண்ட உலகாக அமையும்.

உதவி கொடுப்பவருக்கும் நடத்தையில் ஒரு கடமை உள்ளது. நமக்கு மற்றவருக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது, நாம் அதற்காக மகிழ வேண்டும். கடவுளின் அருளால் கொடுக்கும் நிலையில் உள்ளோம் என்று பணிவுடன் உணர வேண்டும். நாம் கொடுப்பது வேறோரு சமயத்தில் பல விதத்தில் வட்டியுடன் திரும்பி வரும் என்று தெரிந்த பின் கவலை ஏன்? உதவி ஏற்பவர்களை அன்புடனும், மரியாதையுடமும் நடத்த வேண்டும். இது நமது மேன்மையை உயர்த்தும்.

மேலும், ஏற்பவரிடமிருந்து நாம் திரும்பி எதுவும் எதிர்பார்க்கக் கூடாது. சில சமயம், ஒரு கஷ்டமான சூழ்நிலையில் நாம் அவரது ஆதரிப்பை எதிர்பார்க்கத் தோன்றும். ஆனால் அந்த முடிவை அவரிடம் விட்டு விடுவது நல்லது. நம்மிடம் நன்றி பட்டதற்காக அவர்களின் தோள்களில் பெரும் பாரம் வைப்பது சரியில்லை.

முடிவாக, உதவி கொடுப்பவர், ஏற்பவர் இருவரும் பொறுப்புடன், நெறிமுறைகளுக்கு தகுந்தபடி, இரக்கத்துடன் நடந்துக் கொள்வது அவசியமாகும். இந்த உலகில் நாம் அனைவரும் ஒன்றாக உறைகிறோம். அன்புடனும், கனிவுடனும் ஒருவர் மற்றொருவரை நடத்தினால் என்ன?

எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது...
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்
Vasundharaநன்றியே சிறந்த மனப்பான்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *