[soliloquy id=”7620″]
[soliloquy slug=”natural-beauty”]
ஓ…மழையின் அழகு! விடிகாலையில் வானில் இடி முழக்கம் போல மெல்லிய ஒலி வந்தது. அடுத்த முறை ஒலி சிறிது அதிகரித்தவுடன், நான் நினைத்தேன், இது மழையாக இருக்கக்கூடுமோ? அல்லது இது ஒரு ஏமாற்றுதலோ, மனத்தோற்றமோ, கற்பனையோ? பிறகு மூன்றாவது, நான்காவது இடியோசையின் பேரொலி எழுந்தவுடன், இது உண்மை அனுபவம் தான் என்று புரிந்தது!
மழை முதலில் மெல்லென, மெல்லிய தூரலுடன் ஆரம்பித்தது, காண மகிழ்வான காட்சியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக பெருகி, விடா மழையாக பொழிந்தது. ஓ, மழைப்பொழிவின் அற்புதமான இசை! மழையால் நனைந்த மண்ணின் வசீகரமான வாசனை! சில சமயம் வானில் மேகமே இல்லாமல் தெரிகிறது, ஆயினும், மழை பொழிகிறது! அபூர்வமாக தோன்றினாலும் இது உண்மை தான். மெதுவாக பச்சை பசேல் என்ற புல் தண்ணீரில் நனைந்து மகிழ்ச்சியுறுகிறது. செடி கொடிகளின் மலர்கள் ஆர்வமுடன், முன்பை விட சிறந்த நிறத்துடனும், அதிக அழகுடனும் சொலிக்கின்றன. எழிலான மரங்கள் தென்றலில் அசைந்தாடும் அருமை! ஓ, மழை திடிரென்று நிற்க ஆரம்பித்துள்ளது…….. பயப்பட வேண்டாம், நம்மைச் சிறிது ஆச்சரியப் படுத்தி மீண்டும் முன்நிகழ்ந்த அற்புத அனுபவத்தை நமக்கு தருவதற்காகத் தான் இந்த விளையாட்டு! எல்லாம் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு ஆறுதலாகவும் தெரிகிறது.
இயற்கையின் பல்வகைக் கேளிக்கைகளுக்கு வேறொன்றுமே நிகராகாது. மழைப் பொழிவில் எத்தனை விதமான காட்திகள், ஒலிகள்! சில சமயம் வெறும் மழை, மற்ற சில சமயங்களில் கல்மாரி, வேகமான நிரோட்டம், பிரவாகம். வேதனையுற்ற மனித இனத்தின் தாகத்துக்கு இயற்கை அன்னையின் அருள் மழைப் பொழிவு! இறுதியில், மழை நின்றாலும், அதன் அழகு முடிவதில்லை. நடந்து சுற்றி வரும்போது மனதில் உற்சாகம் உண்டாகிறது. ஆங்காங்கே மலர்கள், இலைகள், சிறுச் சிறு தூண்கள், கம்பங்கள் மீது இன்னும் மழைத்துளிகள் தயங்கி நிற்கும் நேர்த்தி, வனப்பு!
இந்த நேரத்தில் தான் கதிரவன் கம்பீரமாக பிரவேசிக்கிறார். ஒரு பகுதியாக மேகங்களால் முகில் மூடிய வானில் மரக்கிளை, இலை, கொடி, இவற்றின் நடுநடுவே ஒளிக் கதிர்கள் பளபளக்க, உயிர் தரும் ஒளியும், ஓங்கி வளரும் சக்தியும் தந்தபடி மாட்சி மிக்க சூரியன் நுழைகிறார். சற்று நேரத்துக்கு முன்னால் மழையால் பூமிக்கு கிடைத்த உணவளிப்பை பயன்படுத்தி செழிப்புடன் உடலிலும் மனதிலும் பலமூட்ட வருகிறார். மழை, கதிரவன், இவை இரண்டில் ஒன்றில்லாமல் மற்றொன்றை எப்படி பாராட்ட முடியும்? இவை இரண்டும் இல்லாமல் எப்படி வாழ முடியும்?